செய்திகள்
மிஸ்பா உல் ஹக்

பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும்: 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு மிஸ்பா-உல்-ஹக் எதிர்ப்பு

Published On 2020-01-12 09:24 GMT   |   Update On 2020-01-12 09:24 GMT
டெஸ்ட் போட்டியை நான்கு நாட்கள் கொண்டதாக குறைத்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவதற்கான வாய்ப்பு அதிகம் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) திட்டமிட்டுள்ளது. ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கால நேரத்தை குறைக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளது. விரைவில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் இந்த பரிந்துரை குறித்து இறுதி முடிவு செய்யப்படும்.

4 நாள் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் வரவேற்பு தெரிவித்தன. அதேநேரத்தில் இதை கவனமுடன் கையாளுமாறும் வேண்டுகோள் விடுத்தன. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி இதுகுறித்து எந்த முடிவும் தெரிவிக்கவில்லை.

கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர், இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன், பயிற்சியாளர் லாங்கர் உள்ளிட்ட பலர் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் 4 நாள் டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா-உல்-ஹக்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

டெஸ்ட் போட்டியில் தற்போது வேகப்பந்து வீரர்கள் ஒரு இன்னிங்ஸ்க்கு சுழற்சி முறையில் 17 முதல் 18 ஓவர்கள் வரை வீசுகிறார்கள். 4 நாட்களாக குறைக்கும்போது 20 முதல் 25 ஓவர்கள் வரை வீச வேண்டிய நிலைவரும். கூடுதலான ஓவர்களை வீசுவதால் பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்டார்க், கம்மின்ஸ், நசீம் ஷா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப்பந்து வீரர்கள் அதிகமான ஓவர்களை வீசவேண்டிய நிலை ஏற்படும். இதனால் அவர்களது வேகப்பந்து வீச்சுத்திறன் பாதிக்கப்படும்.

இவ்வாறு மிஸ்பா- உல்-ஹக் கூறியுள்ளார்.
Tags:    

Similar News