செய்திகள்
கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சென்ற அரசு பஸ்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ்

Published On 2019-11-02 07:58 GMT   |   Update On 2019-11-02 07:58 GMT
பேச்சிப்பாறை, குற்றியாறு தரைப்பாலத்தில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் பயணிகளுடன் அரசு பஸ் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருவட்டார்:

குமரி மேற்கு மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.

பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல்லும் வழியில் குற்றியாறை தாண்டி மாங்காய்மலை, பிலாமலை, மோதிரமலை, கல்லாறு, மயிலாறு போன்ற குக்கிராமங்கள் உள்ளன.

இந்த மலை கிராமங்களில் ஏராளமான தோட்ட தொழிலாளிகள் வசிக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் நகர் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களை தவிர ஒரு சிலர் அலுவலகங்களிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இக்கிராம மக்களின் வசதிக்காக திருவட்டார், மார்த்தாண்டம் மற்றும் குலசேகரத்தில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் குற்றியாறு தரை பாலத்தை தாண்டித்தான் தினமும் செல்ல வேண்டும்.

குற்றியாறு தரை பாலத்தில் அடிக்கடி காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடும். மேலும் கோதையாற்றில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளமும் பாய்ந்தோடி வரும்.

இத்தரைப்பாலத்தை தாண்டி சென்றாலும் அரசு பஸ்கள் ஹேர்பின் வளைவுகளின் வழியாக தினமும் அபாய பயணம் சென்று வருகிறது. திறமையான டிரைவர்களால் மட்டுமே இந்த பஸ்களை இயக்க முடியும்.

இப்படி பஸ்சில் தினமும் அபாய பயணம் செல்லும் பயணிகளுக்கு நேற்று முன்தினம் ஏற்பட்ட அனுபவம் நெஞ்சை பதற வைப்பதாக இருந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே பலத்த மழை பெய்து வந்தது. குறிப்பாக மலையோர பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதுபோல குற்றியாறு தரைபாலத்திலும், பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் அங்கு திருவட்டாரில் இருந்து கல்லாறு செல்லும் அரசு பஸ் வந்தது. பஸ்சில் 4 பயணிகள் மட்டுமே இருந்தனர். பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், தரை பாலத்தில் ஓடிய வெள்ளத்தை கண்டு மிரண்டு போனார்.

தரை பாலம் இருந்த பகுதி வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும். அங்கு நீண்ட நேரம் காத்திருப்பதும் அபாயத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமமாகிவிடும். எனவே அவர் பயணிகளிடம் கருத்து கேட்டார்.

தரை பாலத்தில் நேரம் செல்ல, செல்ல வெள்ளம் அதிகமாக வரும் என்பதால் இப்போதே பாலத்தை தாண்டிவிடுவது நல்லது என்று பயணிகள் கூறியதை தொடர்ந்து டிரைவர், பஸ்சை தரை பாலத்தில் சென்ற வெள்ளத்தின் மீது ஓட்டி சென்றார். பஸ்சும் வெள்ளத்தில் ஆடி, அசைந்து மறு பகுதியை எட்டியது. அதன்பிறகே பஸ்சில் இருந்த பயணிகளும், அதை ஓட்டி சென்ற டிரைவரும், கண்டக்டரும் நிம்மதி அடைந்தனர்.


அரசு பஸ் தரை பாலத்தில் ஓடிய வெள்ளத்தில் தவழ்ந்து சென்ற காட்சியை ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

சிறிது நேரத்தில் இது வைரலாகி, போக்குவரத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி விசாரணையில் இறங்கினர்.

இதற்கிடையே சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.

மலை கிராமங்களை அறிந்தவர்கள், டிரைவரின் துணிச்சலை பாராட்டி கருத்து பதிவிட்டனர். அதே நேரம் காட்டாற்று வெள்ளத்தில் அரசு பஸ்சை எப்படி ஓட்டி செல்லலாம் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இதில் பயணிகள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும், அதே நேரம் பாலத்தின் தன்மையை அறிந்ததால் மட்டுமே அந்த டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். எது, எப்படியோ ஆபத்து ஏற்படாதவரை ஒன்றுமில்லை. இதுவே ஆபத்து ஏற்பட்டிருந்தால்... என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். இதற்கு அந்த தரை பாலத்தை மேம்பாலமாக மாற்றுவதே வழி என்றும் அதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினர்.


Tags:    

Similar News