செய்திகள்
ஹென்ரிக்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

Published On 2021-10-26 14:36 GMT   |   Update On 2021-10-26 14:36 GMT
நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் ‘சூப்பர் 12’ சுற்றில் இன்றைய முதல் ஆட்டத்தில் குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. லீவிஸ் 35 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது வெஸ்ட் இண்டீஸ் 10.3 ஓவரில் 73 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 20 ஓவரில் 150 ரன்னை எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிம்மன்ஸ் 35 பந்தில் 16 ரன்களும், பூரன் 7 பந்தில் 12 ரன்களும், கிறிஸ் கெய்ல் 12 பந்தில் 12 ரன்களும், பொல்லார்டு 20 பந்தில் 26 ரன்களும், அந்த்ரே ரஸல் 4 பந்தில் 5 ரன்களும் அடித்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143  ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டெம்பா பவுமா, ரீஜா ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டெம்பா பவுமா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வான் டர் டஸ்சன் களம் இறங்கினார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹென்ரிக்ஸ் 30 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டஸ்சன் உடன் எய்டன் மார்கிராம் ஜோடி சேர்ந்தார்.

எய்டன் மார்கிராம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 பந்தில் 51 ரன்கள் விளாச தென்ஆப்பிரிக்கா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா 2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
Tags:    

Similar News