செய்திகள்
ரஞ்சன் கோகாய்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

Published On 2021-01-22 17:48 GMT   |   Update On 2021-01-22 17:48 GMT
மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

தலைவர்களுக்கு உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் மத்திய, மாநில மந்திரிகள், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டுமே இந்த வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.

இதில், இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் சம்மந்தப்பட்ட நபருக்கு குண்டு துளைக்காத கார் பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 உதவி இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர், தலா 6 போலீசாருடன் 2 பாதுகாப்பு வாகனம், தேவைப்படும் நேரத்தில் கூடுதலாக 10 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இசட் பிரிவு பாதுகாப்பில் சுமார் 22 பாதுகாப்பு துறையினரும், ஒய் பிரிவு பாதுகாப்பில் 11 பேரும், எக்ஸ் பிரிவில் 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பின் கீழ் ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர்.

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டாலும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை ( சி.ஆர்.பி.எப்) யின் ஆயுதம் ஏந்திய கமாண்டோ பாதுகாப்பு படை ரஞ்சன் கோகாய்க்கு பாதுகாப்பு வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சன் கோகாய் செல்லும் இடங்களுக்கு முன்கூட்டியே சென்று பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபடுவார்கள்.

கடந்த 2019 நவம்பரில் ஓய்வு பெற்ற அவர் பின்னர் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த போது ராமர் கோவில் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குளில் முக்கிய தீர்ப்புகள் வழங்கி உள்ளார் என்பது நினைவுகூறத்தக்கது.
Tags:    

Similar News