உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-01-29 06:26 GMT   |   Update On 2022-01-29 06:26 GMT
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:

நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலெக்டர் சிவராசு தலைமையில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

கொரோனா பரவலில் தேர்தல் நடை பெறவுள்ளதால் பொதுமக்களின் பொது சுகாதாரதம், ஆரோக்கியத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் வேட்பாளர்களோ, கட்சிகளோ, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஊர்வ லம், பாதயாத்திரை, சாலையோரக்கண்காட்சி, சைக்கிள் பேரணி, வாகனப்பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

வாக்காளர்களிடம் கூட்டமாகவோ, பேரணியாகவோ சென்று வாக்கு சேகரித்தல் கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அலுவலர்கள் அந்தந்தப் பகுதிகளில் தொடர்ந்து ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி வழக்குப்பதியப்படும்.

இருப்பினும் தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் பிரசாரம், நடைபேரணி உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படும். இதிலும் விதிமுறைகள் மீறியிருந்தால் வழக்கு பதியப்படும்.

உள் அரங்கங்களில் நடைபெறும் கூட்டங்களில் அதிக பட்சமாக 100 பேருக்கு மேல் அனுமதியளிக்கக் கூடாது. ஆயிரம் பேர் அமரும் வகையிலான திருமண கூடங்களாக இருந்தாலும் இதுதான் விதி. மேலும் தேர்தல் பிரசாரம் நடைபெறும் பகுதியில் உள்ள அனைவருக்கும் முகக்கவசம் வழங்குவதையும், அதை அணியச் செய்வதையும் கட்டாயப்படுத்த வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகழுவ வேண்டும்.

வேட்பாளர்கள் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பிரசாரத்துக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு எக்காரணம் கொண்டும் சிறுவர்களை பயன்படுத்த கூடாது. ஜாதி, மத, மொழி மற்றும் பிற மோதல் போக்குகளை கடைப்பிடிக்கும் வகையில் பிரசாரம் செய்தல் கூடாது. வழிபாட்டுத் தலங்களில் பிரசாரம் செய்யவோ, வாக்கு சேகரிக்கவோ கூடாது. இதற்கான மாநிலத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கான விதிமுறைகள், அரசியல் கட்சிகளுக்கான விதிமுறைகள், தேர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் அடங்கிய கையேடுகளை முழுமையாக படித்து அதன்படி அரசியல் கட்சிகள் நடந்து கொள்ளவேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் என கண்டறியப்பட்ட 157 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
Tags:    

Similar News