ஆன்மிகம்
சாமி சிலைகள் ஊர்வலமாக சென்ற காட்சி.

குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சென்ற சாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு

Published On 2019-09-28 06:21 GMT   |   Update On 2019-09-28 06:21 GMT
குமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்ற சாமி சிலைகளுக்கு எல்லைப்பகுதியான களியக்காவிளையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுத்தித்த நங்கை அம்மன், தேவாரக்கட்டு சரஸ்வதி, வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த நிகழ்ச்சி தமிழக- கேரள ஒற்றுமையை எடுத்து காட்டும் வகையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரி விழா சாமி சிலைகள் ஊர்வலம் நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது.

அங்கிருந்து நேற்று காலை 9 மணிக்கு ஊர்வலம் மீண்டும் புறப்பட்டது. முத்துக்குடை ஏந்திய பெண்கள், சாமி வேடம் அணிந்த பக்தர்கள், சிங்காரி மேள இசை கலைஞர்களின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் ஊர்வலம் சென்றது. மூவாரக்கோணம் இளம்பாலகண்டன் தர்ம சாஸ்தா கோவில், களியக்காவிளை மாடன் கோவில் மற்றும் வழிநுடுக ஏராளமான பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஊர்வலம் மதியம் குமரி-கேரள எல்லையான களியக்காவிளை சென்றடைந்தது. அங்கு, கேரள அரசு சார்பில் சாமி சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரின் அணிவகுப்பு மரியாதை, மற்றும் இசை கலைஞர்களின் இசை முழக்கத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கேரள கவர்னர் ஆரிப் முகமது, எம்.எல்.ஏ.க்கள் ஹரீந்திரன், ஆன்சலன், வின்சென்ட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையாளர் அன்புமணி, மன்னனின் உடைவாளை கேரள தேவசம் போர்டு இணை ஆணையர் தர்சனிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News