செய்திகள்
போரட்டம்

சென்னையில் நாளை சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

Published On 2021-02-23 06:25 GMT   |   Update On 2021-02-23 06:25 GMT
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நாளை சென்னையில் சாலைப் பணியாளர்கள் 73 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறார்கள்.
சென்னை:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை சிறப்பு மாநாடு சேலத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாநில தலைவர் சண்முக ராஜா கூறியதாவது:-

கடந்த 2006 முதல் 2011 வரையிலான 5 வருட தி.மு.க. ஆட்சியிலும் 2011 முதல் 2021 வரையிலான 10 வருட அ.தி.மு.க. ஆட்சியிலும் 15 ஆண்டு காலமாக சாலைப் பணியாளர்கள் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது.

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், இறந்த சாலைப் பணியாளர் காலியிடங்களில் வாரிசுதாரர்களை நியமிக்க வேண்டும், சாலை பணியாளர்களின் தர ஊதியத்தை ரூ.1,900 ஆக உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம்.

சேலம் மாநாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்று எதிர் பார்த்தோம்.

இந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான நாளை (24-ந்தேதி) சென்னையில் சாலைப் பணியாளர்கள் 73 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறோம்.

உணவு, தண்ணீர் இல்லாமல் குடும்பத்துடன் அறப்போராட்டம் நடத்திடவும் 2-வது கட்டமாக வேட்பு மனுதாக்கல் செய்யும் நாள் தொடங்கி வாக்குப்பதிவு நாள் வரையில் தினமும் 3 மாவட்டங்களில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் முன்பு தரையில் உருளும் போராட்டம் நடத்திடவும் முடிவு செய்துள்ளேம். நாளை நடக்கும் உண்ணா விரதத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News