செய்திகள்
கைது

அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.21 லட்சம் மோசடி- தேர்வுத் துறை அதிகாரி கைது

Published On 2021-01-17 07:00 GMT   |   Update On 2021-01-17 07:00 GMT
கோவையில் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த தேர்வுத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவை:

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அப்போது ரத்தினபுரி மருது குட்டி நகரை சேர்ந்த சேகர் (62) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

சேகர் தேர்வுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இந்த நிலையில் சேகர் கடந்த சில வருடங்கள் முன்பு சதீஷ்குமாரிடம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக ரூ.21 லட்சம் கேட்டுள்ளார்.

சதீஷ்குமார் அது உண்மை என நம்பி சேகரிடம் ரூ.21 லட்சத்தை புரட்டி கொடுத்தார். அதன் பின்னர் சேகர் வெகு நாட்களாகியும் வேலை வாங்கித் தராமல் தாமதப்படுத்தி வந்தார்.

சந்தேகம் அடைந்த சதீஷ்குமார் இதுகுறித்து அவரிடம் கேட்டார். அதற்கு சேகர் விரைவில் வேலை கிடைத்துவிடும் என கூறி வந்தார். ஆனால் வெகு நாட்களாகியும் அவர் வேலை வாங்கித் தராததால் சதீஷ்குமார் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

சேகர் பணத்தை தருவதாக கூறி ரூ.21 லட்சத்தில் 5 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி தொகை ரூ.16 லட்சத்துக்கு செக் கொடுத்தார். அந்த செக்கை சதீஷ்குமார் வங்கியில் கொடுத்த போது சேகர் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது.

அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சதீஷ்குமார் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சேகர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News