செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் உடலை படத்தில் காணலாம்.

துறையூர் அருகே மீன்பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி

Published On 2020-11-21 09:10 GMT   |   Update On 2020-11-21 09:10 GMT
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மீன் பிடிக்கச்சென்ற சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானான்.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி விஜயபுரம் தெருவில் வசித்து வருபவர் ராதிகா (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகன் யுகன்(10). 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் ராதிகா வேலைக்கு சென்றுவிட்டார். சிறுவன் நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றுவிட்டான். ராதிகா வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது, சிறுவன் வீட்டில் இல்லை.

அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, சிறுவன் யுகன் நண்பர்களுடன் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் மீன்பிடிக்க சென்ற போது, கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனே அவர் கதறிஅழுது கொண்டே சம்பவ இடத்துக்கு ஓடினார். அங்கு பொதுமக்கள், சிறுவனை கிணற்றுக்குள் தேடிக்கொண்டிருந்தனர். அதற்குள் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினரும், துறையூர் போலீசாரும் அங்கு வந்து, சிறுவனை தேடினார்கள்.

80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் இருந்தது. இதனால் சுமார் 2 மணிநேரம் போராடி சிறுவனை பிணமாக மீட்டனர். சிறுவனின் உடலை பார்த்து அவனது தாயார் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News