ஆன்மிகம்
மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நெருப்பு ஆழியில் தீ மூட்டிய போது எடுத்த படம்.

சபரிமலையில் நடை திறப்பு: நெருப்பு ஆழியில் தீ மூட்டப்பட்டது

Published On 2019-12-31 03:32 GMT   |   Update On 2019-12-31 03:32 GMT
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நெருப்பு ஆழியில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் தினமும் பூஜைகள், வழிபாடு நடந்து வந்தன. 27-ந் தேதி சிறப்பு வாய்ந்த மண்டல பூஜை நடந்தது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது.கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மண்டல பூஜை சமயத்தில் கோவில் வருமானம் ரூ.150 கோடியை தாண்டியது.

இந்த நிலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டினார்.



இன்று முதல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பின் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு 11 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை வருகிற 15- ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும். மேலும் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் போலீஸ் சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் தலைமையில் 1,347 போலீசார் நேற்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News