செய்திகள்
ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டிய டாக்டர்கள்

ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டிய 8 டாக்டர்கள் இடைநீக்கம்

Published On 2021-07-31 02:11 GMT   |   Update On 2021-07-31 02:11 GMT
ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
சிதம்பரம் :

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இதில் ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல் மருத்துவ கல்லூரியில் படிக்கும் பயிற்சி டாக்டர் ஒருவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அவருடன் படிக்கும் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டா்கள், பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்தனா். அதன்படி பல் மருத்துவமனை அருகே இருந்த ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் கேக் வைத்து, வெட்டி பிறந்தநாளை கொண்டாடினா். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனா். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததாக பயிற்சி டாக்டர்கள் 8 பேரை பல் மருத்துவக்கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும் ராஜா முத்தையா செட்டியாரின் சிலையை அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

இதற்கிடையே இடைநீக்கம் செய்யப்பட்ட பல் டாக்டர்கள் 8 பேரும், வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ‘நாங்கள் செய்தது தவறு, எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News