செய்திகள்
அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் சந்திப்பு

50 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் செல்வாக்கை நிரூபித்த அமரீந்தர் சிங்

Published On 2021-08-26 15:46 GMT   |   Update On 2021-08-26 15:46 GMT
அமரீந்தர் சிங் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம், ஆட்சியை தக்க வைக்கும் கனவு கானல் நீராகும் என அதிருப்தி அணியினர் தெரிவித்தனர்.
சண்டிகர்:

சத்தீஸ்கரைப் போன்று பஞ்சாப் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் உள்ளது.  முதல்வர் அமரீந்தருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி துாக்கினார். அமரீந்தரை பகிரங்கமாகவும் விமர்சித்தார். 

இதையடுத்து, சித்துவை காங்கிரஸ் மேலிடம் அழைத்து பேசி சமாதானப்படுத்தியது. அத்துடன், அவரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது. இது அமரீந்தருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். 

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என ஐந்து அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். அமரீந்தர் சிங் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம், ஆட்சியை தக்க வைக்கும் கனவு கானல் நீராகும் என அதிருப்தி அணியினர் தெரிவித்தனர். இதன் பின்னணியில் சித்து உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் தனது செல்வாக்கை கட்சி மேலிடத்திற்கு நிரூபித்திருக்கிறார். இன்று பிற்பகல் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 3 அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை. அதன்பின்னர், முதல்வர் அமரீந்தர் சிங்கின் விசுவாசியான அமைச்சர் ராணா குர்மீத் சோதி வீட்டில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் 50 எம்எல்ஏக்கள், 8 எம்பிக்கள் கலந்துகொண்டனர். அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவு அதிகம் இருப்பதால் எதிரணியை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி தலைமை ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News