செய்திகள்
கோழிகள்

பறவை காய்ச்சல் எதிரொலி: பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை சரிவு

Published On 2021-01-11 05:21 GMT   |   Update On 2021-01-11 05:21 GMT
பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலியாக பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்திவேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ஒன்று ரூ.350 முதல் ரூ.450 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

ஆனால் தற்போது பறவை காய்ச்சல் அச்சத்தின் எதிரொலியாக வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள ரூ.200 முதல் ரூ.250 வரையிலும் விற்பனையானது. வாத்து ஒன்று ரூ.280 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது.

பறவை காய்ச்சல் அச்சத்தால் பொதுமக்கள் கோழிகளை அதிக அளவு வாங்காததால் விற்பனையும் குறைந்து, விலையும் சரிவடைந்ததால் நாட்டுக்கோழி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
Tags:    

Similar News