செய்திகள்
கோப்புபடம்

வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் - மும்பை மக்களுக்கு அரசு எச்சரிக்கை

Published On 2021-06-11 10:46 GMT   |   Update On 2021-06-11 10:46 GMT
வடக்கு மகாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பை, புறநகர் மற்றும் தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் அதிக கனமழை பெய்தது.

இதன் காரணமாக மும்பை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அனைத்து தெருக்களும் வெள்ளத்தில் மிதக்கிறது.

ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஸ், ரெயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மும்பையில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 43.6 சதவீதம் மழை ஒரேநாளில் பெய்துள்ளது.

சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று மும்பை மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் வடக்கு மகாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News