செய்திகள்
பூதலூர் பகுதி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள்

பூதலூர் தாலுகா கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

Published On 2020-10-14 10:23 GMT   |   Update On 2020-10-14 10:23 GMT
பூதலூர் தாலுகா கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளை விரைவில் வேறு இடத்திற்கு அகற்றம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா பகுதியில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மேலும் தனியார் வியாபாரிகள் அதிக அளவில் கடந்த ஆண்டை போல குறுவை நெல்லை கொள்முதல் செய்ய பூதலூர் பகுதிக்கு வரவில்லை. இதனால் அறுவடை செய்யப்படும் நெல் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலை உள்ளது. பூதலூர் தாலுகாவில் 33-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது.

தற்போது வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் பூதலூர் பகுதியில் கொள்முதல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பூதலூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்து செல்லப்படாமல் இருப்பதால் புதிதாக கொள்முதல் செய்து நெல் மூட்டைகளை அடுக்கிவைக்க இடம் இல்லாத நிலை உள்ளது.

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 5ஆயிரம் முதல் 6ஆயிரம் நெல் மூட்டைகள் எடுத்து செல்லப்படாமல் உள்ளது. பல மையங்களில் திறந்தவெளியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திடீரென மழை வந்தால் அனைத்து நெல்மூட்டைகளும் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது.

வெயிலில் காய்வதால் மூட்டைகளில் எடை குறைவு ஏற்படும் நிலையும் உருவாகி விடும் என்பதால் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கொள்முதல் செய்வதில் தாமதம் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் எடுத்துச் செல்லப்பட்டு இடத்தை காலி செய்து கொடுத்தால் மிக விரைவில் கொள்முதல் பணிகளை நிறைவு செய்ய முடியும் என்று கொள்முதல் நிலைய பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய வானிலை நிலவரப்படி மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே கொள்முதல் நிலையங்களில் இருந்து விரைவில் நெல்மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News