வழிபாடு
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Published On 2022-03-21 02:47 GMT   |   Update On 2022-03-21 02:47 GMT
பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செல்லும் பாதைகள், கிரிவீதிகள் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கையும் செலுத்துகின்றனர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் மாலையில் தங்கமயில், வெள்ளி ஆட்டுக்கிடா, பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி கிரிவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் பழனிக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செல்லும் பாதைகள், கிரிவீதிகள் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியத்துக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் ஆனந்தமாக கிரிவீதியை சுற்றி வந்தனர். திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிகம் கூடும் பஸ்நிலையம், பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் போலீசார் சாதாரண உடைகளில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News