இந்தியா
தடுப்பூசி போடும் பணி

கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க அசத்தலான பரிசுகளை அறிவித்த உள்ளாட்சி அமைப்பு

Published On 2021-12-02 12:07 GMT   |   Update On 2021-12-02 12:07 GMT
மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி நகராட்சியில் தடுப்பூசி போடும் மக்களுக்கு எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றன. எனினும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியும் நடைபெறுகிறது. சில பகுதிகளில் தடுப்பூசி போடுவதை  ஊக்குவிக்க பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி நகராட்சியில் தடுப்பூசி போடும் மக்களுக்கு எல்இடி டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சந்திரபூர் உள்ளாட்சி நிர்வாகமும் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மும்பையில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில், தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களில் 73 சதவீதம் பேர் இதுவரை தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 56 சதவீதம் பேர் இரண்டு தவணைகளையும் போட்டுள்ளனர். 

கொரோனா மூன்றாவது அலை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஹிங்கோலி கலெக்டர் ஜிதேந்திர பாபால்கர் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அதிக அளவில் மக்களை தடுப்பூசி போடுவதற்கு ஊக்குவிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். 

டிசம்பர் 2 முதல் 24 ஆம்தேதிவரை தடுப்பூசிப் போட்டுக் கொள்ளும் நகரவாசிகள் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இதில் முதல் பரிசாக எல்இடி டிவி வழங்கப்படும் என்றும் அதேபோல் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், கிரைண்டர் உள்பட மேலும் 5 பரிசுகள் வழங்கப்படும் என்றும் ஹிங்கோலி நகராட்சி கவுசின் தலைவர் டாக்டர் அஜய் குர்வாடா தெரிவித்தார்.

முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களும் இந்த அதிர்ஷ்ட குலுக்கலில் பங்கேற்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News