செய்திகள்
விமான சேவை

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை செப்.30 வரை நீட்டிப்பு

Published On 2020-08-31 08:51 GMT   |   Update On 2020-08-31 08:51 GMT
சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா  கட்டுக்குள் வரவில்லையென்றாலும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு நேற்று முன் தினம் வெளியிட்டது. இதில், மெட்ரோ ரெயில் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கும் என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில்,  சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை வரும்  செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவித்துள்ளது.

மேலும்,  மத்திய அரசு அனுமதித்த வழித் தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை. சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும். சரக்கு போக்குவரத்து சேவை தொடரும். வந்தே பாரத் திட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சேவை தொடரும்  எனவும் டிஜிசிஏ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News