ஆன்மிகம்
ராமேசுவரம் கோவில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை

ராமேசுவரம் கோவில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை

Published On 2020-09-01 07:59 GMT   |   Update On 2020-09-01 07:59 GMT
இன்று முதல் கோவில்களில் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ராமேசுவரம் கோவிலில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புண்ணிய தலமாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்குள் கடந்த 5 மாதத்திற்கு மேலாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசிக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ராமேசுவரம் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

அரசின் வழிகாட்டுதல்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு உட்பட்டவர்களும், கர்ப்பிணிகளும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கோவிலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். கோவிலின் நுழைவு வாசல் பகுதியில் கோவிலுக்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், 6 அடி இடைவெளி விட்டும் கோவிலுக்குள் வரிசையாக வந்து செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவிலின் பிரதான சன்னதியான சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற சன்னதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி கிடையாது. அது போல் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தீர்த்த கிணறுகளில் நீராட அரசு அனுமதி வழங்கிய பின்னர், வழக்கம் போல் பக்தர்கள் தீர்த்தம் ஆடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய் பழ தட்டு போன்ற எந்த பூஜை பொருட்களையும் கொண்டு வருவதற்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ராமேசுவரம் கோவில் என்றாலே அது தீர்த்த கிணறுகளில் நீராடுவது முக்கியமானது. ஆனால் தீர்த்த கிணறுகளில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதைத் தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் வருவதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் வழிகாட்டுதலுடன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் சூப்பிரண்டு ககாரின்ராஜ், பேஸ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் மற்றும் பணியாளர்கள் செய்தனர். கோவிலில் பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 7.30 வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையாக செல்லும் வகையில் போதிய இடைவெளியில் கோவிலினுள் வட்டங்கள் வரையப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News