வழிபாடு
தேரோட்டம் நடந்ததை படத்தில் காணலாம். (உள்படம்: வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலப்பர்)

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-01-29 08:52 GMT   |   Update On 2022-01-29 08:52 GMT
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் நடைபெறும் தேரோட்டங்களில் குழந்தை வேலப்பர் கோவிலில் நடைபெறும் தேரோட்டமானது மிகவும் புகழ் பெற்றது.
கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தில் பழனி தண்டாயுதபாணி கோவிலின் உபகோவிலான மிகவும் பழமை வாய்ந்த குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. கொடைக்கானல் மலைக்கிராமங்களில் நடைபெறும் தேரோட்டங்களில் குழந்தை வேலப்பர் கோவிலில் நடைபெறும் தேரோட்டமானது மிகவும் புகழ் பெற்றது. இந்த கோவிலில் கடந்த 20-ந்தேதி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால் தினமும் சேவல், மயில், காளை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் குழந்தை வேலப்பர் கோவில் வளாகத்தில் உலா வந்தார். மேலும் கொரோனா காரணமாக தேரோட்டம் நேற்று நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட‌து.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு சிலதளர்வுகளை அளித்தது. இதைத்தொடர்ந்து பழனியில் இருந்து பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலுக்கு கோவில் நிர்வாக‌த்தின‌ரால் தேர் கொண்டு வரப்பட்டது. பின்னர் தேர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின்படி தேரோட்டம் நடைபெற்றது. இதில் குழந்தை வேலப்பர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் 4 ரத வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் தேரின் முன்பு ‘அரோகரா’ கோஷம் முழ‌ங்க‌ அங்கபிரதட்சணம் செய்து தேங்காய்களை உடைத்து பாரம்பரிய முறைப்ப‌டி பழங்கால வாத்தியங்களை இசைத்து மலர்களை தூவினர். மிகவும் விமரிசையாக நடந்த இந்த திருவிழாவில் கொடைக்கானலை சுற்றியுள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News