ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் வண்ண துணிகளால் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்ற போது எடுத்தபடம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பணிகள் தீவிரம்

Published On 2020-11-18 08:42 GMT   |   Update On 2020-11-18 08:42 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

வழக்கமாக விழா நாட்களில் காலை மற்றும் இரவில் சாமி மாட வீதியுலா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாட வீதியில் சாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடைபெற உள்ளது. இதற்காக சாமி உலாவின் போது பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி (தீபத் திருநாளான 29-ந்தேதி தவிர்த்து) வரை ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நேற்று ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பெற்று வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவரும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தீபத்திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திருக்கல்யாண மண்டபத்தில் பல்வேறு வண்ண துணிகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News