ஆன்மிகம்
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம்

Published On 2021-04-08 04:50 GMT   |   Update On 2021-04-08 04:50 GMT
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற அட்சயலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பங்குனி திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மார்ச் 30-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 20 ஆண்டுகளாக மரத்திலான 4 சக்கரங்கள் மற்றும் அச்சுகள் மூலம் தேர் செய்யப்பட்டு இருந்தது. தற்போது ரூ.2.18 லட்சம் மதிப்பீட்டில் இரும்பிலான சக்கரங்கள் மற்றும் அச்சுகள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பங்குனி தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. அப்போது தேரில் அஞ்சுவட்டத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 4 வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News