ஆன்மிகம்
கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் கோமளவல்லி, விஜயவல்லி தாயாருடன் சாரங்கபாணி)

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2021-04-19 07:15 GMT   |   Update On 2021-04-19 07:15 GMT
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 26-ந் தேதி நடைபெற இருந்த சித்திரை தேரோட்டம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 3-வது தலமாகும். 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பட்ட இந்த தலத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தம் இயற்றப்பட்டதாக தலவரலாறு கூறுகிறது.

இங்கு தை முதல் நாள், சித்திரை பவுர்ணமியில் தேரோட்டம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். திருவாரூர் தியாகராஜசாமி கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப்பெரிய தேரோட்டம் நடைபெறும் தலமாக இக்கோவில் உள்ளது.

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று நிகழ்ச்சியில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கருட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி கோமளவல்லி, விஜயவல்லி தாயாருடன் எழுந்தருளினார்.

விழாவில் வருகிற 28-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சாமி உள்பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 26-ந் தேதி நடைபெற இருந்த சித்திரை தேரோட்டம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News