ஆன்மிகம்
மீனம் ராசி

மீனம் ராசிக்காரர்களின் திருமண யோகம்

Published On 2019-11-18 06:18 GMT   |   Update On 2019-11-18 06:18 GMT
குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும்.
குரு பகவான் உங்கள் ராசியில் பத்தாம் இடத்துக்கு வந்து இருக்கிறார். பத்தாம் இடம் என்பது உங்களது வாழ்வாதார தொழில் மற்றும் வேலையை குறிப்பதாகும். பத்தாம் இடத்தில் குரு வரும் போதெல்லாம் தொழில் மற்றும் வேலையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போது குரு பகவான் சொந்த வீட்டில் இருப்பதால் இத்தகைய மாற்றங்கள் எதுவும் நிகழாது.

அதற்கு பதில் குருவின் பார்வை காரணமாக நன்மைகள்தான் அதிகம் உண்டாகும். குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 4, 6-ம் இடங்களை பார்க்க போகிறார். 2-ம் இடத்தின் பார்வை காரணமாக சுப நிகழ்ச்சி ஏற்பாடுகளில் நல்ல விதமான வெற்றிகள் உண்டாகும். 4-ம் இடத்தின் பார்வை காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். 6-ம் இடத்தின் பார்வை காரணமாக புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.

மொத்தத்தில் குரு பகவானின் பார்வை காரணமாக இந்த குரு பெயர்ச்சி நாட்களில் உங்களது பதவி, அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உயரும். ஏற்கனவே பத்தாம் வீட்டில் சனி, கேது இருப்பதால் பாதிப்பு ஏற்படும் என்று பெரும்பாலானவர்கள் சொல்வதுண்டு. ஆனால் பத்தாம் இடத்துக்கு சென்றுள்ள குரு பகவான் அந்த பாதிப்புகளை எல்லாம் நிவர்த்தி செய்து பலன் தருவார் என்பதே உண்மை.

ஆனால் இந்த பலன்களை மீனம் ராசிக்காரர்கள் முழுமையாக பெற வேண்டும் என்றால் உரிய வழிபாட்டை அவசியம் செய்தே ஆக வேண்டும். குரு வழிபாடு அதில் முதன்மையானது. குரு கவசம் படித்து வந்தால் உங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. நிச்சயமாக மேலும் மேலும் வெற்றி கிடைக்கும்.

குரு பகவானின் ஆறாம் இடத்து பார்வையால் சுப நிகழ்ச்சிகளில் பேச்சுவார்த்தை வெற்றி பெறும். இந்த வெற்றியை பெறுவதற்கு திருவண்ணாமலைக்கு சென்று அருணாச லேஸ்வரரை வழிபட வேண்டும். அவரை வழிபட்ட பிறகு கிரிவலம் சென்று வருவது இன்னும் சிறப்பு. பவுர்ணமி கிரிவல நாட்களில் உங்களால் முடிந்த அன்னதானம் செய்தால் மேலும் சிறப்பு உண்டாகும். மங்கல காரியங்கள் தொடர்பான உங்களது முயற்சிகள் அனைத்துக்கும் உடனுக்குடன் வெற்றி கிடைக்கும்.

மகான்களை இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்தால் மீனம் ராசிக்காரர்கள் மன குழப்பங்களில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண ஏற்பாடுகள் செய்பவர்கள் சில குழப்பங்களை, சஞ்சலங்களை சந்திக்க நேரிடலாம். அத்தகைய நிலை ஏற்பட்டால் காஞ்சீபுரம் மகா பெரியவா அதிஸ்டானத்துக்கு சென்று வழிபடலாம். அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்துக்கு சென்று குரு வழிபாடு செய்யுங்கள். மனதில் மாற்றம் ஏற்படுவதை காண்பீர்கள்.

28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான மகர ராசியில் வக்கிரம் அடைகிறார். இதன் மூலம் உறவுகள் மேம்படும். துண்டிக்கப்பட்டு இருந்த பழைய உறவுகள் மீண்டும் உங்களை தேடி வரும். இதன் மூலம் குடும்பத்தில் புதிய சொந்தங்கள் தோன்றும். அதாவது புதிய உறவுகள் மூலம் உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.

31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் வக்கிரம் ஆகிறார். இந்த கால கட்டங்களில் மீனம் ராசிக்காரர்களின் செயல்பாடுகள் மிக எளிதாக மாறும். எந்த செயலில் ஈடுபட்டாலும் வெற்றி உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகள் உடனே கை கூடி வரும். பெண்களின் தடை பட்ட திருமணம் மீண்டும் சுறுசுறுப்பு பெற்று திட்டமிட்டபடி நடைபெறும்.

இந்த கால கட்டத்தில் திருமண பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துங்கள். நல்லவரன் வரும்போது அலட்சியம் செய்து விடாதீர்கள். விசாரித்து முடிவு செய்யுங்கள். இல்லையெனில் இந்த கால கட்டத்தை தவற விட்டால் புதிய திருமண பேச்சுவார்த்தைகளுக்கு அலைய நேரிடலாம். எனவே கவனம் தேவை. இதில் வெற்றி பெற திருப்போரூர் சித்தர் சிதம்பரம் சுவாமிகளை ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால் பலன் உண்டு.

சித்தர் வழிபாடு மட்டுமின்றி சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தாலும் வெற்றி கிடைக்கும். சுவாதி நட்சத்திர தினத்தன்று நரசிம்மருக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டாலும் குரு பெயர்ச்சி மாற்றம் உங்களை செம்மைப்படுத்தும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களை வழங்கி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணம் கை கூடும். பெண்கள் நினைத்தது நடக்கும்.

மீனம் ராசியில் பூரட்டாதி (4-ம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருச்செந்தூர் முருகனை சென்று வழிபட வேண்டும். அங்கு செல்பவர்கள் குரு வழிபாடு செய்ய தவறாதீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரரை வழிபட வேண்டும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சீபுரம் காமாட்சியம்மனை வழிபட வேண்டும்.

2020-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதிக்கு பிறகு உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாரிசுகளுக்கு உழைக்கும் திறன் மேம்படும். இந்த கால கட்டத்தில் திருவண்ணாமலைக்கு சென்று வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டால் உங்கள் குடும்பத்தில் கெட்டி மேளம் ஓசை நிச்சயம் கேட்கும்.

லிங்கமே மலையாக அமைந்த மலை தவமுனிகளும் சித்தர்களும் திகழும் சிவத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலம் நினைத்தாலே முக்தி தரும் தலம் என்றெல்லாம் சிறப்பு பெற்றது திருவண்ணாமலை தலம். இங்கேதான், உண்ணாமுலையம்மை சிவபெருமானிடம் இடப்பாகம் பெற எண்ணி, கிரிவலம் வந்து தவம் செய்தார். இங்குதான் இடப வாகன சிவனார் அன்னை பார்வதிக்கு தன் உடம்பில் இடப்பாகம் தந்து ஜோதி ரூபமாகக் காட்சி தந்தார்.

சக்தி இத்தலத்தில் மீண்டும் சிவனிடம் இணைய தவமிருந்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராகக் காட்சிகொடுத்தார். பிருங்கி முனிவர் உண்மை உணர்ந்தார். இப்படி அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை வெளிப்படுத்திய பெருமை உடைய தலம் இது. லிங்கமே மலை என்பதால், இந்த மலைதான் இங்கே புனிதம் வாய்ந்தது. திருவண்ணாமலை கிரிவலம் என்பதும் இந்த மலையை சிவலிங்கமாகக் கருதி வழிபட்ட சித்தர்கள், முனிவர்கள், ஞானிகளின் செயலால் ஏற்பட்டதுதான்.

கிரிவலத்தை எங்காவது துவங்கி எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றியுள்ள 14 கி.மீ. தொலைவுக்கும் பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும்.
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக ஒவ்வொரு லிங்கம் உண்டு. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் என இந்த எட்டு லிங்கங்களை வணங்கிச் செல்ல வேண்டும். சித்தர்கள் நம்மோடு நடந்து வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, பேசிக்கொண்டு செல்லக்கூடாது. அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் நினைத்தபடி நடக்க வேண்டும். அடிக்கடி மலையைப் பார்த்து கைகூப்பி, வணங்கி, வேறு திசை எங்கும் பார்க்காமல், பவுர்ணமி நிலவைப் பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில்தான் பார்வதிக்கு சிவபெருமான் இட பாகம் அளித்தார். எனவே அந்த தினத்தில் கிரிவலம் வருதல் சிறப்பு. முனிவர், ஞானியர், சித்தர்கள் தமிழ் மாதப் பிறப்பின்போதும் பிரதோஷ காலத்திலும் கிரிவலம் வந்தார்களாம். எனவே மாதப்பிறப்பு அன்று கிரிவலம் வருதல் நல்லது. பவுர்ணமியன்று கிரிவலம் செல்வது மிகவும் நலம் பயக்கும். அமாவாசையன்று கிரிவலம் வந்தால், மனக் கவலைகள் மாயும். தம்பதியர் 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலை நீராடி மலைவலம் வந்தால் மகப்பேறு கிட்டும்.

ஞாயிறு- சிவபதவி திங்கள்- இந்திர பதவி செவ்வாய்- கடன் வறுமை நீங்கும் சுபிட்சம் நிலவும். புதன்- கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் வியாழன்- ஞானியர் நிலையை அடையலாம். வெள்ளி- விஷ்ணு பதம் கிட்டும். சனி- நவகிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். மனத்துயர் நீக்கும் தலம் இது. கேட்கும் வரங்களை அள்ளித் தரும் மூர்த்தி அருணாசலேஸ்வரர். கல்யாண வரம், குழந்தை வரம், வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக் கடனை நிறைவேற்று கின்றனர். அண்ணா மலையாருக்கும் அம்மைக்கும் கல்யாண உற்சவம் நடத்தி வைத்தும், அன்னதானம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர், தொட்டில் கட்டுகின்றனர். இறந்தவர் நினைவாக மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்) எடைக்கு எடை நாணயம், பழம், காய்கனி, வெல்லம் ஆகியவை நேர்த்திகடனாக வழங்கப்படுகிறது. நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மாப் பொடி, பால், தயிர், பழவகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிஷேகமும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகமும் செய்கிறார்கள். சுவாமிக்கு வேட்டியும் அம்மைக்கு புடவையும் சாத்தி, வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

இந்தத் தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர். அண்ணா மலையார் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் பெயர் அபிதகுஜாம்பாள். உண்ணாமுலையாள் என அழகுத் தமிழ்ப் பெயர். மகிழமரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பிரம்மதீர்த்தம், சிவகங்கை இவை தலத்தின் தீர்த்தங்கள். இந்தத் தலம் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22-வது தலம். கார்த்திகை மாதம் பிரம்மோற்சவ விழா- தீபத்திருவிழா 10 நாட்களும் களை கட்டும்.
Tags:    

Similar News