செய்திகள்
குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்ததால் தவித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்டு வருவதை காணலாம்

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு- பாகூர் பகுதி வெள்ளக்காடானது

Published On 2021-11-20 06:44 GMT   |   Update On 2021-11-20 06:44 GMT
தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.
வில்லியனூர்:

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுவை மற்றும் தமிழக பகுதியில் கனமழை பெய்தது.

புதுவையில் ஒரே நாளில் 19 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது. வீடுகளில் புகுந்த மழை நீரை வடிய வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை நிரம்பியதால் அதில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாகூர் அருகே உள்ள சித்தேரி அணை நிரம்பியது. தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரி, வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதன் நீரும் ஊருக்குள் புகுந்த வண்ணம் உள்ளது.

நேற்று பாகூர் அருகே உள்ள கிராமப்புறங்களில் தான் வெள்ளம் புகுந்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகூர் நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்தது.

பாகூரில் மாட வீதி தவிர மற்ற பகுதிகளான பங்களா வீதி, புதிய காமராஜ் நகர், குட்டை, பாகூர்பேட், மகா கணபதி நகர், கூட்டுறவு குடியிருப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் பாகூர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் வெளியில் வர முடியாமலும், தங்களது உடமைகளை எடுத்து செல்ல முடியாமலும் தவித்தனர். பெரும்பாலான மக்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். ஆனாலும் தங்களது உடமைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் விடிய விடிய தூங்காமல் கண் விழித்தபடி இருந்தனர்.

பாகூர் புதிய நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

வெள்ளம் காரணமாக பாகூர் பகுதியில் 15 குடும்பத்தினர் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பாகூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கன்னியக்கோவில் பகுதியிலும் வெள்ளம் புகுந்தது.

மீட்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேரிடர் மீட்பு குழுவினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தென்பெண்ணையாற்றில் மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தகவலால் பாகூர் பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.


Tags:    

Similar News