செய்திகள்
பிசிசிஐ

ரஞ்சி கோப்பை, சையது முஷ்டாக் அலி போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.

Published On 2021-08-31 13:45 GMT   |   Update On 2021-08-31 13:45 GMT
ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறும் நிலையில், சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதி ஆட்டம் டெல்லியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் முதல் தர கிரிக்கெட்டான ரஞ்சி கோப்பை தொடர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் நடைபெறவில்லை. இந்நிலையில், ரஞ்சி கோப்பை உள்ளிட்ட அனைத்து வகையான முன்னணி கிரிக்கெட் தொடர்களையும் நடத்தப்போவதாக  பி.சி.சி.ஐ. தகவல் வெளியிட்டது.

இதனடிப்படையில், சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 27-ம் முதல் நவம்பர் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை  டிசம்பர் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதையடுத்து, ரஞ்சி கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முதல்  மார்ச் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என பி.சி.சி.ஐ. அட்டவணையை வெளியிட்டுள்ளது.

மேலும், சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டி டெல்லியிலும், ரஞ்சி கோப்பையின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவிலும் நடைபெறும்.  அதுமட்டுமல்லாமல் ரஞ்சி போட்டி  மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெறும். பிப்ரவரி 20-ந்தேதி முதல் நாக் அவுட் ஆட்டங்கள் தொடங்கும்  என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Tags:    

Similar News