ஆன்மிகம்
கோபி பச்சைமலை

கோபி பச்சைமலையில் வருகிற 24-ந் தேதி சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-20 06:44 GMT   |   Update On 2021-02-20 07:31 GMT
கோபி பச்சைமலையில் வருகிற 24-ந் தேதி சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக காலை 6 மணி அளவில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
கோபி பச்சைமலையில் சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது. 15 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கோவிலை புனரமைக்கும் பணிகளும், வர்ணம் பூசும் பணிகளும் நடந்தன.

மேலும் சிவகாமி அம்பாள் உடனமர் நடராஜருக்கு புதிய கனகசபை, திருப்படி மண்டபங்கள், அன்னதான மண்டபம், யாகசாலை மண்டபம், மணிமண்டபம், மடப்பள்ளி ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன.

பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று கோ பூஜையும், நவக்கிரக ஹோமமும், இன்று (சனிக்கிழமை) விக்னேஸ்வர பூஜையும், யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. கோவில் அடிவாரத்தில் 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு் 8 கால பூஜைகள் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி காலை 9.25 மணி அளவில் நடக்கிறது. முன்னதாக காலை 6 மணி அளவில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன்பின்னர் காலை 9.05 மணி அளவில் ராஜகோபுரம், விமான கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கூனம்பட்டி ஆதீனம் ராஜ மாணிக்க சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கே.சி.கருப்பணன், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விக்ரம் கபூர், பிரபாகர், ரமண சரஸ்வதி, திருமகள், மங்கையர்கரசி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராமன், ராஜகோபால், வெங்கடாசலம், திருப்பணிக்குழு தலைவர் பி.கே.ஈஸ்வரன், திருப்பணி ஒருங்கிணைப்பாளர் முத்துரமணன், செயல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள். இதையொட்டி காலை 7 மணி முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News