ஆன்மிகம்
வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளிய காட்சி.

சமயபுரம் கோவிலில் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வருகிறார்

Published On 2021-04-20 04:12 GMT   |   Update On 2021-04-20 04:12 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வருகிறார். தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பு காரணமாக திருவிழா மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விழாக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கடந்த 11-ந் தேதி தேர்த்திருவிழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்துஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை வாகனம்,சேஷ வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தார். நேற்று அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற வேண்டிய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், அரசின் உத்தரவுப்படி நடைபெறாது. ஆனால் இன்று காலை 10.30 மணிக்குமேல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட சிறிய அளவிலான சப்பரத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரமான இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முதல் நாளிலேயே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்தில் திரள்வார்கள். ஆனால் தற்போது தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இதன் காரணமாக சமயபுரம் களையிழந்து காணப்படுகிறது.
Tags:    

Similar News