உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு போக முடியாது -வேலூர் மாநகராட்சி அதிரடி

Published On 2021-12-02 12:38 GMT   |   Update On 2021-12-02 12:38 GMT
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இது குறித்து பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நடவடிக்கையை மாநில சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பொது சுகாதாரத் துறையின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில், வேலூர் மாநகராட்சியில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News