செய்திகள்
பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ - அருண் ஜெட்லியின் இறுதி சடங்கு

அருண் ஜெட்லியின் இறுதி சடங்கில் பாஜக எம்.பி உட்பட 11 பேரின் செல்போன்கள் திருட்டு

Published On 2019-08-27 04:35 GMT   |   Update On 2019-08-27 04:35 GMT
முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் இறுதி சடங்கின்போது பாஜக எம்.பி உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது டெல்லி:

உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி (67), சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி காலமானார்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டு டெல்லியின் யமுனைக் கரையில் உள்ள நிகம்போத் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தில் முக்கிய தலைவர்கள் கார்களும் பின் சென்றன. பின்பு துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது.



அங்கு நடைபெற்ற இறுதிச் சடங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்ட பாஜக எம்.பி பாபுல் சுப்ரியோ உட்பட 11 பேரின் செல்போன்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து செல்போனை பறிகொடுத்தவர்களுள் ஒருவரான திஜாரவாலா செல்போன் திருட்டு போனது குறித்தும், செல்போனின் தற்போதைய லொகேஷன் குறித்தும் பதிவிட்டு, உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் டெல்லி போலீசை டேக் செய்துள்ளார்.

Tags:    

Similar News