லைஃப்ஸ்டைல்
மாணவர்கள் சமூக தொண்டாற்ற வேண்டும்

மாணவர்கள் சமூக தொண்டாற்ற வேண்டும்

Published On 2020-01-13 05:23 GMT   |   Update On 2020-01-13 05:23 GMT
மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழவேண்டும்.
நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார், அமெரிக்க நாட்டு அதிபர் ஜான் கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். புத்தாண்டு பிறந்த தருணத்தில் உங்கள் எண்ணங்கள் சிறந்தவையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழவேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும்.

முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். விவசாயிகளிடம், அவர்களுக்கு அறியாத வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கி கூறி, பயிர் விளைச்சலுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதாலும், குப்பைகளை சாலையில் கொட்டுவதாலும் ஏற்படும் சுகாதாரக்கேட்டை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பொழுதுபோக்கு நேரத்தை வீணாக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவையில்லாத வீண்பிரச்சினைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம்போக மீதி நேரத்தில் செல்போனில் இணையதளம் மூலம் கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர்.

எனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்லவேண்டும். இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயலவேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்றவேண்டும்.

ஏனென்றால் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது. இதனை ஒருபோதும் மறக்கலாகாது. நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு, நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். ஏனென்றால் நாம் இல்லாமல் நாடு இல்லை. சிறுதுளி பெரு வெள்ளம் போல், நாம் ஒவ்வொருவரும் செய்யும் சிறு தொண்டு பெருந்தொண்டாய் நாட்டை வளப்படுத்தும் என்று நினைவில் கொண்டு செயல்படுவோம்.
Tags:    

Similar News