செய்திகள்
சாய் சுதர்சன் பந்தை சிக்சருக்கு அடித்த காட்சி

டிஎன்பிஎல் கிரிக்கெட் - தொடக்க ஆட்டம் மழையால் ரத்து

Published On 2021-07-19 16:05 GMT   |   Update On 2021-07-20 09:50 GMT
பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட சாய் சுதர்சன், 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
சென்னை:

ஐந்தாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, டேரில் பெராரியோ தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற சேலம் அணி, கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்து, கணேஷ் மூர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் இணைந்த கவின்-சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறக்கவிட்ட சாய் சுதர்சன், 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 பவுண்டரி, 5 சிக்சர்களில் இந்த இலக்கை எட்டினார்.

முன்னதாக கவின் 33 ரன்களிலும், கேப்டன் ஷாருக்கான் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். முகிலேஷும் ஒரு ரன் மட்டுமே எடுத்து, ரன்அவுட் ஆனார்.

18 ஓவர் முடிவில் கோவை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மைதானத்தில் நிலவிய ஈரப்பதத்தை உலர வைக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்காததால் இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News