ஆன்மிகம்
தேரி குடியிருப்பு கற்கு வேல் அய்யனார் கோவில்

தேரி குடியிருப்பு கற்கு வேல் அய்யனார் கோவிலில் நேமிசங்களை செலுத்த பக்தர்களுக்கு அனுமதி

Published On 2020-12-16 08:36 GMT   |   Update On 2020-12-16 08:36 GMT
உடன்குடி அருகே,பிரசித்திபெற்ற தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இன்று(புதன்கிழமை) நேமிசங்களை செலுத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தேரிகுடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள பிரசித்திபெற்ற கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவில், தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த நவ.16-ந் தேதி காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மாலை 6 மணிக்கு வில்லிசை நடந்தது.

முக்கிய விழா நாட்களான டிச.13-ந்தேதி முதல் 2 நாட்களில் காலை, நண்பகல், இரவு நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இந்த நாட்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்த 2 ஆயிரத்து 500 பக்தர்களுக்கும், கோவிலுக்கு நேரில் வந்த 500 பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கள்ளர் வெட்டு திருவிழா நேற்று மாலையில் நடந்தது. இவ்விழாவையொட்டி மாலை 4 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு பின்புறம் உள்ள செம்மணல் தேரியை அடைந்தனர். அங்கு மாலை 4.45 மணிக்கு கள்ளர் வெட்டு நடந்தது. கொரோனா தடையால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்சிங், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோவில் செயல் அலுவலர் ஜெயகாந்தி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று(புதன்கிழமை)பக்தர்கள் வழக்கமாக ஆடு, கோழி நேமிசங்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துவருகின்றனர்.
Tags:    

Similar News