செய்திகள்

நாகர்கோவிலில் வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-07-13 08:07 GMT   |   Update On 2018-07-13 08:07 GMT
நாகர்கோவிலில் அரசு வங்கி மானேஜர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். கேரள தலைமை செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது மகன் அஞ்சு என்ற சந்திரன். (வயது 28). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள அரசு வங்கியில் மானேஜராக வேலை பார்த்து வந்தார்.

வேலைக்கு செல்ல வசதியாக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.தினமும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் பாங்கிக்கு சென்றுவிடுவார்.

கடந்த வாரம் இவரது சகோதரருக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கடந்த திங்கள் கிழமை விடுமுறை எடுத்து விட்டு ஊருக்கு சென்றார். செவ்வாய் கிழமை நாகர்கோவில் திரும்பி வந்த அவர் அன்றே பணிக்கு திரும்பினார்.

வங்கியில் நேற்று அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டபின்பு வீடு திரும்பிய அஞ்சு,மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் அஞ்சு வங்கிக்கு செல்லவில்லை. இதனால் பாங்கி ஊழியர் காலை 9 மணி அளவில் அஞ்சுவின் செல்போனுக்கு போன் செய்தார். போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் அஞ்சுவை தேடி அவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்தார். அங்கு சென்று பார்த்த போது,அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே அஞ்சு தூக்குபோட்டு இறந்து கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த ஊழியர் இது பற்றி வங்கி அதிகாரிகளுக்கும், வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து அஞ்சுவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.மேலும் அஞ்சுவின் பெற்றோருக்கும் அவர் இறந்த தகவலை தெரியப்படுத்தினர். தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவில் வருகிறார்கள்.

அஞ்சு தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? வேலை பளு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் இன்று வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News