செய்திகள்
மெட்ரோ ரெயில்

40 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வழி காட்டும் அறிவிப்பு பலகை

Published On 2021-09-17 03:36 GMT   |   Update On 2021-09-17 03:36 GMT
சென்னை மாநகரில் உள்ள 40 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை மாநகராட்சி முழுவதும் வைக்கப்பட உள்ளது.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் மற்றும் 2-ம் வழித்தடத்தில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்களை இயக்கி வருகிறது. சராசரியாக தினசரி 1 லட்சம் பேரை கையாண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேலும் கூடுதலாக பயணிகளை கையாள புதிய வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக வாடகை ஆட்டோ, கார் பயன்பாடு மற்றும் மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் வாடகைக்கு விடும் முறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. பயணிகள் ஆர்வமுடன் இவற்றை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை மாநகரில் உள்ள 40 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் வழியை காண்பிக்கும் அறிவிப்பு பலகை மாநகராட்சி முழுவதும் வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பெரிய அளவில் ஒளிரும் சிக்னல்கள் நிறுவப்படுகிறது. அத்துடன் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்கள், திரையரங்குகள், பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகில் உள்ள பொதுமக்களுக்கு மாநகரில் உள்ள 40 மெட்ரோ ரெயில் நிலையங்களை அடையாளம் காட்டும் வகையில் வழி காண்பிக்கும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளது.

குறிப்பாக மாநகராட்சி முழுவதும் உள்ள முக்கிய சாலைகள், சந்தைகள், அரசு கட்டிடங்கள், திரையரங்குகள், வணிக மற்றும் அலுவலக கட்டிடங்கள், மத கட்டிடங்கள், அருகிலுள்ள ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரெயிலுக்கான உயர்த்தப்பட்ட பாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில், ஒளிரும் அறிவிப்பு பலகைகள் மற்றும் சிக்னல்கள் நிறுவப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைந்த உடன் பஸ் நிலையங்களில் இருந்தோ அல்லது நகரத்தின் முக்கியமான இடத்தில் இருந்தோ அருகிலுள்ள மெட்ரோ நிலையத்தை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். கடந்த ஆண்டு, வடபழனி மற்றும் அரும்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே 100 அடி சாலையில் பயணப் பலகைகள் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டன. பயணிகளின் வரவேற்பின் அடிப்படையில் மற்ற நிலையங்களுக்கும் இதை நீட்டிக்க திட்டம் உள்ளது.

அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், அனைத்து அடையாளங்களும் ஒரே சீராக அமைக்கப்படுகிறது. அறிவிப்பு பலகை வைப்பது தொடர்பாக மத்திய அரசு, ரெயில்வே, மாநகர போக்குவரத்து கழகம், நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, காவல்துறை மற்றும் விமான நிலைய ஆணையம் போன்ற பிற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து புதிய அடையாளங்கள் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் வெளியூர்களில் இருந்துவரும் பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களை கண்டறிய எளிதாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Tags:    

Similar News