செய்திகள்

டிரைவரை கீழே தள்ளி விட்டு ரூ.20 லட்சம் மதிப்புள்ள தேங்காயுடன் லாரியை கடத்திய கும்பல் கைது

Published On 2018-11-13 09:57 GMT   |   Update On 2018-11-13 09:57 GMT
நெகமம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள தேங்காயுடன் கூடிய லாரியை கடத்தி சென்ற கும்பலை ஜி.பி.எஸ். கருவி மூலம் போலீசார் கைது செய்தனர்.
நெகமம்:

சென்னை போரூரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 39). லாரி உரிமையாளர்.

இவரிடம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மனோகர் (30) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி மனோகர் கோவைக்கு லோடு ஏற்ற லாரியில் வந்தார். பொள்ளாச்சியை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து 10½ டன் தேங்காயை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.

இரவு 9.30 மணி அளவில் நெகமம் அருகே சென்ற போது ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் லாரியை வழி மறித்து ஆயுதங்களை காட்டி மனோகரனை மிரட்டினர்.

பின்னர் மனோகரனை காரில் ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டிச் சென்றனர். கார் பல்லடம்-திருச்சி ரோட்டில் சென்ற போது மனோகரனை கீழே தள்ளி விட்டு கும்பல் தப்பிச் சென்றது. அதிர்ச்சியடைந்த மனோகரன் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று லாரி உரிமையாளர் பிரகாசை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார். அவர் போலீசில் புகார் செய்தார்.



கடத்தி செல்லப்பட்ட லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் லாரி பல்லடம்-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்கு சிலர் லாரியில் இருந்து தேங்காய்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.

அங்கிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (25), ஹரிபிரசாத்(26), பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல் (25), மணிகண்டன் (23), அப்துல் ரகுமான் (23), சந்தோஷ்(20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதில் வெங்கடேஷ்குமார், ஹரிபிரசாத் ஆகியோர் டிரைவர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளிமாவட் டங்களுக்கு பொருட்கள் லோடு ஏற்றிச் செல்லும் விவரங்கள் தெரிந்துள்ளது.

சமீபகாலமாக இவர்கள் வேலையில்லாமல் இருந்துள்ளனர். சம்பவத்தன்று வெங்கடேஷ்குமார் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, செலவுக்காக லாரியை கடத்தி தேங்காய்களை விற்று பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து 6 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி லாரியை கடத்தியதை ஒப்புக் கொண்டனர்.

இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் தேங்காய்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News