செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் இன்று முதல் ஓட்டல், டீகடைகளில் 50 சதவீத இருக்கைகளுடன் சாப்பிட அனுமதி

Published On 2021-04-10 11:26 GMT   |   Update On 2021-04-10 11:26 GMT
சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓட்டல், டீகடைகளில் இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

சென்னை:

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஓட்டல், டீகடைகளில் இன்று முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 50 சதவீதம் இருக்கைகளுடன் அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள பெரிய, சிறிய ஓட்டல்கள், அரசின் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களை அனுமதித்தன.

சென்னையில் சுமார் 10 ஆயிரம் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக விலகி வந்த நிலையில் தற்போது மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஓட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள பிரபலமான ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல்கள் வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் அனைத்து ஓட்டல்களிலும் பொதுமக்கள் உணவு சாப்பிட செல்லும் போது கிருமிநாசினி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஓட்டலுக்குள் நுழையும் ஒவ்வொருவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் விருந்தினர்களின் பெயர் விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களின் தொடர்பு எண் உள்ளிட்டவை கேட்டு பெறப்படுகிறது. கை கழுவும் இடம், சாப்பிடும் மேஜைகள், இருக்கைகள் அனைத்தும் கிருமிநாசினி மூலம் 3 வேளையும் கட்டாயம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுவரையில் முழு அளவு இருக்கைகளுடன் செயல்பட்ட ஓட்டல்கள் இப்போது பாதியாக குறைக்கப்பட்டு உள்ளன. இடைவெளி விட்டு மேஜை மற்றும் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

இதே போல டீ கடைகளிலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. அதிகமான இருக்கைகள் போட்டு உட்கார வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் சென்னையில் உள்ள டீ கடைகளில் இருக்கைகள் குறைக்கப்பட்டன.

பெரும்பாலான டீ கடைகளில் வெளியில் நின்றபடியே டீ, காபி குடித்து சென்றனர். கடைக்குள் வரக்கூடிய பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

சென்னையில் வீதிக்கு வீதி டீ கடைகள் பெருகியுள்ள நிலையில் கூட்டமாக கூடி டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது.

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்கவும், உடனுக்குடன் டீ அருந்தி விட்டு செல்லவும் வாடிக்கையாளர்கள் கேட்டு கொள்ளப்பட்டனர். டீ கடைகள், ஓட்டல்களை சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகள் மீது அபராத நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News