செய்திகள்
அசாம் முதல்வராக பதவியேற்ற ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாமின் 15-வது முதல்வராக பதவியேற்றார் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Published On 2021-05-10 07:48 GMT   |   Update On 2021-05-10 10:48 GMT
அசாம் முதல்வர் பதவியேற்பு விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக மட்டும் 60 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 50 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணியை பாஜக தொடங்கியது. தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதாக பாஜக கூறியிருந்தது. 

ஏற்கனவே முதல்வராக இருந்த சர்பானந்த சோனோவால், இந்த தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோருக்கிடையே கடும் போட்டி இருந்தது. அவர்களில் யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தியது. இரண்டு தலைவர்களையும் அழைத்து பேசினர். 

பாஜக சட்டமன்ற தலைவரை (முதல்வர்) தேர்வு செய்வதற்காக மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், நேற்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஹிமந்தா பிஸ்வா சர்மா (வயது 52) சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்துடன், ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆளுநர் ஜெகதீஷ் முகியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநர் ஒப்புதல் அளித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.



இதையடுத்து, இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் 15-வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சரவையில் இடம்பெற்ற 13 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியில் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவரது வருகையால் அசாமில் பாஜக வலுவடைந்தது. அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களில் பாஜகவின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருந்ததால், கட்சி மேலிடம் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது.
Tags:    

Similar News