லைஃப்ஸ்டைல்
அப்படியே அணியலாம்...ஆயத்தப் புடவைகள்

அப்படியே அணியலாம்...ஆயத்தப் புடவைகள்

Published On 2021-10-30 03:41 GMT   |   Update On 2021-10-30 03:41 GMT
திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான்.
ஆயத்த ஆடைகள் (ரெடிமேட்) போல புடவைகளிலும் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது புதுவரவாக உள்ளது. அதிலும், திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான்.

மற்ற ஆயத்த ஆடைகளைப் போலவே இவ்வகை ஆயத்தப் புடவைகளும் தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சில நொடிகளிலேயே இவற்றை உடுத்திக் கொள்ளும் விதத்தில் தைத்து தயார் நிலையில் இருப்பவை இவ்வகைச் சேலைகள்.

மேலே இடுப்புப் பட்டையில் அட்ஜஸ்ட் செய்து அணிவது போல் கொக்கியானது கொடுக்கப்பட்டு புடவையின் கீழ்ப்புறம் ஃபிரில்களுடன், தோள்பட்டையில் அமரும் ஃபீளீட்டுகள் கூட அப்படியே அணிந்து கொள்வது போல் ரெடிமேடாக வரும் புடவைகளுக்கு ஏற்றார் போன்ற தைக்கப்பட்ட சோளிகள் பல்வேறு டிசைன்களில் அட்டகாசமாக வருகின்றன.

நீளமான பாவாடையின் கீழ்ப்புறம் அழகிய ஃபிரில்களானது அதிக சுருக்கங்களுடன் தைக்கப்பட்டு தனியாக உள்ளது. அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் அழகிய கற்கள் பதித்த வேலைப்பாட்டுடன் நெட்டட் சோளிகள் இருக்க பாவாடையின் துணியிலேயே துப்பட்டாவானது மடிப்புகளுடன் சோளியின் முன்புறம் இணைக்கப்பட்டு பக்கவாட்டில் வளைவாகத் தொங்கி சோளியின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை அணியும் பொழுது அவை பார்ப்பதற்கு புடவையை நவீனமாக அணிந்தது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. மிக அழகான வண்ணங்கள் மற்றும் மென்மையான துணி ரகங்களில் வரும் இவற்றை “காக்ரா புடவைகள்” என்றும் அழைக்கிறார்கள்.

புடவைகளின் கீழ்ப்புறம் மூன்று அடுக்குகளாக ஃபிரில் வைத்து வரும் புடவைகள் பிளெயின் வண்ணத்திலும், பல்வேறு பிரிண்ட்டுகளுடனும், புடவையானது பிளெயின் வண்ணத்திலிருக்க ஃபிரில்கள் பூப்போட்ட டிசைன்களுடனும் இருப்பது போன்றும் தோள்பட்டையில் புடவை மடிப்புகளை இணைத்து அதன் மேல் அழகிய புரோச்சுகள் வைத்து வருபவை அசத்தலாக உள்ளன.

சோளிகளில் அழகிய வண்ணக் கற்கள், சமக்கிகள், முத்துக்கள் வைத்து செய்யப்படும் வேலைப்பாட்டின் அச்சு அசலாக புடவை மடிப்பின் ப்ரோச்சிலும் வேலைப்பாடுகள் இருப்பது மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

ரஃபல் புடவைகள் அல்லது ரெடிடுவேர் புடவைகள் என்று அழைக்கப்படும் இவற்றின் பல்லுவும் ஒவ்வொரு விதமாக உள்ளது. புடவைகளில் வரும் ஃபிரில்கள் பல்லுவிலும் நெளியாக வந்து குறுகிய உயரமுடையவையாக இருப்பது புடவைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

ஸ்கர்ட் போல அணிந்து கொள்வது ஒரு மாடல் என்றால் ரேப் அரவுண்டு மாடல் மற்றொரு வகையாக உள்ளது. இந்தப் புடவைகளில் வரும் வண்ணச் சேர்க்கைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். அேத போல் புடவைகளில் வரும் பளபளப்பு கண்ணைக் கவரும் விதமாக உள்ளன.

மிகவும் அருமையான வேலைப்பாட்டுடன் வரும் இவ்வகைப் புடவைகள் ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்தே கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

தோள்பட்டையில் பல்லுவிற்கு பட்டையாக மடிப்புகள் இல்லாமல் குழாய் போன்று சுருட்டி அதன்மேல் அழகிய வேலைப்பாடுகளுடன் வருவதும் அமர்க்களமாக உள்ளது.

சோளியானது ஸ்லீவ் லெஸ்ஸாக பிளெயின் நிறத்திலிருக்க அதன்மேல் எம்பிராய்டரி செய்யப்பட்ட கோட்டின் கீழ்ப்புறம் ஃபிரில்கள் இடுப்புவரை தொங்குவது போல் இருக்க அதன்மேல் புடவையை அணிந்து கொள்ளலாம். இவை “த்ரீ பீஸ்” மாடல் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வகை ஆயத்த புடவைகள் அனைத்துமே மிகவும் மென்மையான துணி ரகங்களில் செய்யப்பட்டவையாக இருப்பதால் இவற்றை அணியும் பொழுது அணிந்தவரின் உடல்வாகை ஒல்லியாக காட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அதேபோல் புடவையின் கலரிலேயே சோளி இருப்பது ஒருவகை என்றால் புடவை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சோளி இருப்பது மற்றொரு வகை. வெல்வெட் துணிகளில் வேலை பாட்டுடன் சேலைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சோளிகள் வருவது மற்றொரு வகை. இவ்வகைப் புடவைகள் பெரும்பாலும் அதிக ஃப்ளேர்கள் இருப்பது போன்றே வடிவமைப்படுகின்றன.

ஸ்லீவ்லெஸ் சோளிக்கு நெக்லஸ் மாடல் அருமையான வேலைப்பாட்டுடன் வரும் சிறிய கோட். இதை அணிய விருப்பமில்லை என்றால் தனியாகக் கழற்றி விடலாம். இந்த நெக்லஸ் மாடல் கோட்டை அணியும் பொழுது வேறு கழுத்தணி அணிவதற்கு அவசியமே இருக்காது. இவையும் “த்ரீ பீஸ்” புடவை என்றே அழைக்கப்படுகின்றது.

கௌன் டைப்பில் வரும் புடவைகளும் புதுவரவே கழுத்திலிருந்து இடுப்பு வரை வேலைப்பாட்டுடன் டாப்பானது இருக்க இடுப்பிலிருந்து தரையைத் தொடும் அளவுக்கு பிளெயின் நிறத்துணியானது ஃப்ளேர்களுடன் டாப்புடன் இணைப்பட்டு பல்லுவும் பட்டாயாகத் தைக்கப்பட்டு அப்படியே அணிந்து கொள்ளும் விதமாக உள்ளது. டாப்பில் வேலைப்பாட்டிலேயே இடுப்பில் அணிவதற்கு பெல்ட்டானது கொடுக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் மணிகள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட “ஷ்ரக்கானது” ரெடிமேட் புடவைகளின் மேல் தனியாக அணிந்து கொள்வது போல் வந்திருப்பது புதுமையாகவும் மிகவும் அருமையாகவும் உள்ளது.


Tags:    

Similar News