செய்திகள்
கோப்புப்படம்

ஒழுங்காக பல் தேய்ப்பது இல்லை, குளிப்பது இல்லை- கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்கும் பெண்

Published On 2020-01-11 06:52 GMT   |   Update On 2020-01-11 06:52 GMT
பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், சாதாரண காரணங்களுக்காக கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாநில பெண்கள் ஆணையத்திடம் மனு அளித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவருடைய மனைவி சோனிதேவி (20). இவர்களுக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் சோனிதேவி, மாநில பெண்கள் கமி‌ஷனிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நானும் எனது கணவரும் விசாலி மாவட்டம் நாயகனோ கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த 2 மாதங்களாக அவருடைய நடவடிக்கை சரியில்லை.

அவர் 10 நாட்களுக்கும் மேலாக முகசவரம் செய்யவில்லை. தாடியுடன் இருக்கிறார். தினமும் பல் துலக்குவது இல்லை. குளிக்கவும் இல்லை. இதை சகித்துக்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு குழந்தை இல்லை.

சராசரி மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை அவர் செய்வது இல்லை. இந்த காரணங்களால் என் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை.

இதனால் அவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அவருடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டுகிறேன். விரைந்து இதற்காக நடவடிக்கை எடுக்க வேன்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சோனிதேவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநில மகளிர் கமி‌ஷன் உறுப்பினர் பரத்மா கூறும்போது:-

கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்கு சோனி தேவி சொல்லும் காரணம் மிகவும் சாதாரணமாக உள்ளது.

அவருக்கு அறிவுரை கூறி இருக்கிறோம். 2 மாதம் அவகாசம் கொடுத்திருக்கிறோம். மாற்றம் ஏற்படாவிட்டால் மேல் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம்.

மகளிர் கமி‌ஷன் பெண்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக பணிபுரிகிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் குடும்பநல கோர்ட்டை அவர்கள் அணுகுவது குறித்து ஆலோசனை வழங்கப்படும். முடிந்தவரை இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று மாநில பெண்கள் கமி‌ஷன் உறுப்பினர் பரத்மா தெரிவித்தார்.
Tags:    

Similar News