செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை

Published On 2021-09-18 04:43 GMT   |   Update On 2021-09-18 04:43 GMT
காய்ச்சலுடன் பள்ளிக்கு நேற்று வந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இன்று சுமார் 40 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தென்காசி:

ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 450 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு சுற்றுவட்டார பகுதிகளான உடையாம்புளி, புதூர், நாலாங்குறிச்சி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ்களில் வந்து படித்து செல்கின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இங்கு சுமார் 20 மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை அதிகரித்து திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் மேலும் 32 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையிலும் நெகட்டிவ் என வந்ததால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.

எனினும் நேற்று ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதே சமயம் காய்ச்சலுடன் பள்ளிக்கு நேற்று வந்த மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தனர்.

நேற்று வரை 104 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இன்றும் சுமார் 40 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. விரைவில் அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்து முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News