செய்திகள்

அத்வானி உழைப்பின் பலனை அனுபவிக்கும் அமித்ஷா, மோடி - சிவசேனா தாக்கு

Published On 2019-03-23 12:24 GMT   |   Update On 2019-03-23 12:24 GMT
பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் உழைப்பின் பலனை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அனுபவித்து வருவதாக சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. #Advani #AmitShah #Modi #Shivsena
மும்பை:

பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரது வழிகாட்டலால் உருவாக்கப்பட்ட பாஜகவின் பலன்களை அமித் ஷா, மோடி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசியலில் பீஷ்மாச்சாரியராக திகழ்ந்து வருபவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. ஆனால் அவரது பெயர் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாததில் ஆச்சர்யம் இல்லை. அத்வானியின் சகாப்தம் பாஜகவில் முடிவுக்கு வந்துவிட்டது.



குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 6 முறை தேர்வு பெற்றுள்ளார். ஆனால் தற்போது அந்த தொகுதியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார். இதன் அர்த்தம் அவரை வலுக்கட்டாயமாக ஓய்வுபெற வைத்துவிட்டனர்.

பாஜகவை தோற்றுவித்தவர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அத்வானி. அவருக்கு பூரண ஒத்துழைப்பு நல்கியவர் அடல் பிகாரி வாஜ்பாய். ஆனால், தற்போது இவர்கள் இருவரது இடத்தை மோடியும், அமித் ஷாவும் வகிக்கின்றனர். இதிலிருந்து கட்சியில் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படுவதில்லை என உறுதியாகிறது.

பாஜக மூத்த தலைவரான அத்வானியின் அயராத உழைப்பின் பலனை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் அனுபவித்து வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளது.#Advani #AmitShah #Modi #Shivsena
Tags:    

Similar News