உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் ஒத்திவைப்பு

Published On 2022-04-16 07:32 GMT   |   Update On 2022-04-16 07:32 GMT
மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று தொடங்க இருந்த எள் ஏலம் அடுத்த வாரம் 23-ந் தேதி சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
காங்கயம்:

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருள்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஏலங்களில் முத்தூர் நகர மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள், நத்தக்காடையூர் பழையகோட்டை, குட்டப்பாளையம், மருதுறை, பரஞ்சேர்வழி, பாப்பினி முள்ளிப்புரம் வருவாய் கிராம பகுதி விவசாயிகள் மற்றும் ஈரோடு மாவட்டம் கொல்லன்கோவில், சிவகிரி, மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதிகள், அஞ்சூர், கொங்குடையாம்பாளையம் ஊராட்சி பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம்  கார்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் விளை பொருட்களை விற்று பலன் அடைந்து வருகின்றனர்.

இப்பகுதிகளில் எள் அறுவடைப் பணிகள் கடந்த 4 நாட்களாக தொடங்கப்பட்டு உள்ளதால் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று சனிக்கிழமை முதல் எள் ஏலம் தொடங்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேளாண் மற்றும் வேளாண் வணிக விற்பனைத்துறை மூலம் அனுமதி வழங்கியது. 

ஆனால் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று தொடங்க இருந்த எள் ஏலம் அடுத்த வாரம் 23-ந் தேதி சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.


இதுபற்றி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் கூறியதாவது:-

கீழ்பவானி பாசன விவசாயிகளிடமிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்ட நஞ்சை சம்பா நெல்மூட்டைகள் மழை காரணமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் உள்ள அனைத்து குடோன்களிலும் உள்ளே அடுக்கி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட எள் சாகுபடி விவசாயிகள் தங்களது எள் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூட குடோன்களில் இருப்பு வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் இன்னும் ஒரு வார காலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அனைத்தும் மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.  

எனவே இன்று  முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தொடங்க இருந்த எள் ஏலம் வருகிற 23-ந் தேதி சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

எனவே அடுத்த சனிக்கிழமை முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் தாமதமின்றி தொடங்கி நடைபெறும். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News