செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

பொங்கல் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். வாழ்த்து

Published On 2020-01-14 05:06 GMT   |   Update On 2020-01-14 09:46 GMT
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகில் உன்னதமான தொழிலான உழவுத்தொழிலை மேம்படுத்திடவும், விவசாய பெருமக்களின் வாழ்வு சிறக்கவும், நுண்ணீர்ப் பாசனத்திற்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கும் திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை திட்டம், சிறு குறு விவசாயிகளை ஊக்குவித்து கூட்டாக சாகுபடிப்பணியினை மேற்கொள்ள “கூட்டு பண்ணைய திட்டம்”, அதிகரித்து வரும் பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம், தகவல் தொழில் நுட்பம் மூலம் விவசாய பெருமக்களுக்கு வேளாண் தகவல்களை கொண்டு சேர்க்கும் “உழவன்”கைபேசி செயலி, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக விவசாயிகளுக்கு தரமான சான்றுபெற்ற விதைகள் வழங்குதல்,

தமிழ்நாட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள் ஆகிய விளைபொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில் விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம், மண் மாதிரிகள் ஆய்வு செய்து, மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள் இடுவதற்காக மண்வள அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்குதல், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.



பொங்கல் பண்டிகையை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் கொண்டாடிட தமிழ்நாடு அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன், 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கி சிறப்பித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

“தமிழகத்தின் பொங்கல் புதுநாள் போன்றதோர் பொன்விழா இந்த வையகத்தில் வேறெங்கும் இல்லை. அகமகிழ்ச்சியுடன், போலிப் பூச்சுகளின்றி-ஆனால் புதியதோர் பொலிவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கல் புதுநாளுக்கு ஒப்பான விழா எங்கும் இல்லை” என்று பூரிப்புடன் நமது அறிவுலக ஆசான் பேரறிஞர் அண்ணா கூறினார்.

பொங்கல் விழா நம்மை எல்லாம் தலைநிமிரச் செய்யும் தமிழர் விழா. குடும்பம், குடும்பமாக, அன்புடன் வளர்க்கும் பசுவும், கன்றும் ஒருசேர தங்கள் அன்புக்குரல் எழுப்ப எல்லோரும் கொண்டாடி மகிழ்வோம்.

தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவே எப்பொழுதும் பாடுபட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் நடைபெறும் கழக அரசு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கலிடத் தேவையான பொருட்கள் கொண்ட பரிசுத் தொகுப்பையும், ரூ.1000 ரொக்கத்தையும், 2 கோடியே 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறது. கழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளை பெற்றுச் செல்லும் கோடானு கோடி மக்கள், தங்கள் நெஞ்சார, வாயார புரட்சித்தலைவி அம்மாவின் அரசை வாழ்த்துவதைக் கேட்கையில் எங்கள் இருதயம் பெருமகிழ்ச்சி அடைகிறது. நம் மக்களுக்கு இன்னும் பல நற்பணிகளை ஆற்ற வேண்டும் என்ற மன உறுதி பிறக்கிறது. மக்களுக்கு தொண்டாற்ற புது சக்தி பிறக்கிறது.

எந்நாளும் நாங்கள், உங்கள் நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரர்களாக, உங்களுக்காகவே உழைப்போம். தமிழ்நாட்டை உயர்த்தி வைப்போம் என்பதே எங்களது பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News