செய்திகள்
செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு கடத்த இருந்த ரூ.6 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Published On 2021-07-31 03:56 GMT   |   Update On 2021-07-31 03:56 GMT
வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை தேனாம்பேட்டை வனத்துறை அதிகாரி ராஜேஷ் தலைமையிலான வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பூர்:

ஆந்திராவில் இருந்து சென்னை துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட இருப்பதாக வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதையறிந்த செம்மரக்கட்டைகள் கடத்தல் கும்பல், ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த லோடு வேனை, பழைய வண்ணாரப்பேட்டை முத்தையாமுதலி தெருவில் உள்ள சதாம் உசேன் என்பவருக்கு சொந்தமான கார் ஷெட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அங்கு லோடு வேன் ஒன்றில் பெரிய அளவிலான 3 மரப்பெட்டிகள் இருந்தது. இதையடுத்து தண்டையார்பேட்டை தாசில்தார் ஜெயந்தி மாலா, வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை மற்றும் கொருக்குப்பேட்டை போலீசார் முன்னிலையில் அந்த மரப்பெட்டிகளை தனிப்படை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் இரும்பு குழாய்களும், அதற்கு அடியில் செம்மரக்கட்டைகளும் இருப்பது தெரியவந்தது.

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற அந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை தேனாம்பேட்டை வனத்துறை அதிகாரி ராஜேஷ் தலைமையிலான வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். சுமார் 1 டன் எடை கொண்ட அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது. கார் ஷெட் உரிமையாளர் சதாம் உசேன் மற்றும் மண்ணடியை சேர்ந்த லோடு வேன் உரிமையாளர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News