செய்திகள்
மதுபானம்

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடிக்கு மது விற்பனை

Published On 2021-04-05 05:16 GMT   |   Update On 2021-04-05 10:13 GMT
சட்டமன்ற தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக ஒரே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.11 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது.
திருப்பூர்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் பின்னர் தேர்தல் அதிகாரிகள் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன் காரணமாக கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஆகிய 3 நாட்கள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இனி நாளை மறுநாள் (புதன்கிழமை) தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை 3 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால், நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான மதுவகைகளை 3 நாட்களுக்கும் கணக்கிட்டு வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் விற்பனையும் மும்முரமாக நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 253 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இந்த மொத்த கடைகளையும் சேர்த்து நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.11 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. வழக்கமாக இதுபோன்ற டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் நாட்களில் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை விற்பனை நடைபெறும். ஆனால் 3 நாட்கள் மூடப்படுவதால் ரூ.11 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது என டாஸ்மாக்அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News