செய்திகள்
மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது எடுத்த படம்.

தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது- மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

Published On 2020-12-10 14:34 GMT   |   Update On 2020-12-10 14:34 GMT
புயல் நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
திருப்பரங்குன்றம்:

மதுரை திருநகரில் உள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதுரை தெற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் தனக்கன்குளம் பழனிக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார், திருப்பரங்குன்றம் தொகுதி பிற்பட்டோர் பிரிவு தலைவர் ரமேஷ், திருமங்கலம் தொகுதி தலைவர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை தலைவர் பொன் மகாலிங்கம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு 75 ஏழைப்பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், திருநகர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்கிட ரூ.3 ஆயிரம் கோடி மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் மிகக் குறைவாக ரூ.75 கோடி வழங்கி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந்தியாவில் தமிழகத்தை மட்டும் மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது. மத்திய அரசு வழங்கவில்லை என்றால் மாநில அரசு போராடி பெற வேண்டும்.

ஆனால் 70 ஆண்டு காலத்தில் இதுவரை இல்லாத ஒன்றாக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் குனிந்து வளைந்து கொடுத்து தன்மானத்தை விட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அதிகார போதையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News