செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Published On 2020-01-28 08:50 GMT   |   Update On 2020-01-28 08:50 GMT
சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 8 வழிச்சாலை பசுமைதிட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதே போல மத்திய அரசு சார்பிலும் ஐகோர்ட்டு விதித்த தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.


சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமனா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது கிருஷ்ணமூர்த்தி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 28-ந் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தது.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை வழக்கு இன்று பட்டியலாக இருந்த நிலையில் திடீரென நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை நாளைக்காவது விசாரிக்க வேண்டும் என்று திட்ட இயக்குனர் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு பட்டியலாகும் போது விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.

Tags:    

Similar News