செய்திகள்
ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)

எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு- அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

Published On 2021-02-16 08:34 GMT   |   Update On 2021-02-16 08:34 GMT
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி பொன்னேரியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி பொன்னேரியில் இன்று காலை 8.55 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.

இதில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், போடி நாயக்கன்பட்டி, சாலபாளையம், எருமப்பட்டி பகுதியை சேர்ந்த காளைகள் மட்டுமின்றி சேலம், ஆத்தூர், கூலமேடு, தம்மம்பட்டி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 400 காளைகள் பங்கேற்றன.

இவற்றை அடக்க எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சுழற்சி முறையில் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டி தொடங்கும் முன்பு ‘‘காளைகளை துன்புறுத்த மாட்டோம், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைதியான முறையில் நடந்து கொள்வோம், கொரோனா தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வழங்கிய தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம்’’ என அதிகாரிகள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து போட்டியை நாமக்கல் ஆர்.டி.ஓ. கோட்டைகுமார், சின்ராஜ் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஷ்குமார், சேந்த மங்கலம் தாசில்தார் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் மாடு வாடிவாசல் வழியாக விடப்பட்டது. பின்னர் வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்கினார்கள். பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளி குதித்து ஓடியது. இந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

போட்டியை காண எருமப்பட்டி, அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்கள் குடும்பங்களுடன் வந்திருந்தினர். நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் கைகளை தட்டியும், சத்தம் எழுப்பியும் மாடுபிடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளுக்கும் கைகளை தட்டி கரகோ‌ஷம் எழுப்பினார்கள். காளைகள் பார்வையாளர்கள் மாடத்திற்குள் புகுந்து விடாமல் இருக்க, இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அடங்க மறுத்த காளைகளை அடக்க துடித்து சாதித்த காளையர்களுக்கு மின்விசிறி, கட்டில்கள், மிக்சி, வேட்டிசட்டை, சில்வர் பாத்திரங்கள், வெள்ளிக்காசு மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் அடக்க முடியாத மாடுகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கேயே மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் மைதானத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். ஆம்புலன்ஸ் மற்றும், தீயணைப்பு வாகனமும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் மொபைல் டாய்லெட் வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News