செய்திகள்
ஆலப்புழா கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக கரைக்கு இழுத்து வரப்பட்ட படகு.

தாக்டே புயல்- கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-05-15 09:04 GMT   |   Update On 2021-05-15 09:04 GMT
எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் அவரசம், அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது.

இந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மேலும் இந்த புயலுக்கு தாக்டே புயல் என்றும் பெயரிடப்பட்டது. இதன் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டது.



அதன்படி கேரளாவின் வடமாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதற்கிடையே தாக்டே புயலால் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அம்னி தீவுக்கு அருகே 80 கிலோ மீட்டர் தொலைவிலும், கண்ணூர் கடற்கரையில் இருந்து மேற்கு, தென்மேற்கு திசையில் 360 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இதனால் கேரளாவின் வடமாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்யும் எனவும் எச்சரித்து உள்ளது.

தாக்டே புயல் சின்னம் காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளில் நேற்று முதல் பெய்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. அந்த வீடுகளில் இருந்த மக்கள் மீட்பு படையினர் மூலம் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே கேரள கடற்கரை பகுதியில் பெரும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் பனை மர உயரத்திற்கு எழுந்தன. அவை தடுப்பு சுவர்களை தாண்டி ஊருக்குள்ளும் புகுந்தது.

இதனால் எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் நீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் அவரசம், அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

தாக்டே புயல் காரணமாக இன்றும் நாளையும் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் கடலுக்கு சென்ற மீனவர்களும் அவசரமாக கரை திரும்பினர்.
Tags:    

Similar News